தேவாலா பகுதிக்கு காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வந்தன

கூடலூர்: கூடலூரை அடுத்த தேவாலா அட்டி மற்றும் பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டம் சரகம் 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில்  இரண்டு காட்டு யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் விவசாயி ஒருவரின் வீடு ஆகியவற்றை அடுத்தடுத்து சேதப்படுத்தின. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள்  யானைகள் புகுந்து சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர் காட்டு  யானைகளை கும்கி யானைகள் கொண்டு விரட்டி காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்க உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று தேவாலா பகுதிக்கு முதுமலையிலிருந்து உதயன் மற்றும் ஜான் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. காட்டு யானைகள் இரவு நேரத்தில் கைதகொல்லி பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவதால் அப்பகுதியில் கும்கிகளை நிறுத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் யானைகள் ஊருக்குள் வராததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: