தமிழகத்தில் இரவு நேர ஊடரங்கா?: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1 மாதமாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரேநாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் பழனிசாமி இந்த ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் இல்லங்களுக்கு சென்று உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு அதிகப்படியான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எனவே அதனை போன்று போதுமான படுக்கை வசதிகளை உருவாக்குவது, பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, ஊரடங்கு தளர்வுகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போதைய சூழலில் 11 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் எனவும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்களின் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆகவே வீட்டில் இருந்தே பணி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக தொழில்நிறுவனங்களுக்கு அதற்கான உத்தரவு பிறப்பிப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவதும், பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் மாவட்டங்களில் தற்போது எவ்வாறான சூழல் நிலவி வருகிறது, தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்த விரிவான ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவது பலன்தருமா என்றும் ஆலோசனை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுமா என்பது தொடர்பாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும்.

Related Stories: