×

மியாவ் மியாவ் பூனைக்குட்டி! : பூனை வளர்ப்பது எப்படி?

வளர்ப்புப் பிராணிகளிலேயே ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்கப்படுவது பூனை. கிராமங்களில் எலி பிடிக்கவும் வளர்க்கிறார்கள். நாய்களை வளர்க்க ரொம்பவும் மெனக்கெடும் பலரும், பூனைக்கு  அத்தகைய முயற்சிகள் எதையும் செய்வதில்லை. அறிவியல் முறைப்படி பூனையை பராமரிப்பது என்பது அரிதே. மற்ற பிராணிகள் வளர்ப்பு பற்றி எழுதப்பட்ட புத்தகங்களும், வழிமுறைகளையும்  ஒப்பிடும்போது பூனை வளர்ப்புக்கு வழிகாட்டும் விஷயங்கள் குறைவே. வளர்க்கும் பூனைக்கு வரக்கூடிய நோயைக் கூட அதன் எஜமானர் உணருவதில்லை.பூனை கொஞ்சம் முரட்டுத்தனம் கொண்டது.  அதனுடைய உணவுப்பழக்க வழக்கங்களும் சற்றே வினோதமானது. எனவே அதை கொஞ்சம் அனுசரித்துதான் வளர்க்க வேண்டும். அதுபோலவே பூனைக்கான வசிப்பிடம். தன் எஜமானரை விட அது  பழகிவரும் இடத்துக்கே அதிகமாக முக்கியத்துவம் தரக்கூடிய தன்மை கொண்ட விலங்கு. கூண்டு அல்லது தனி அறை பூனைக்கு வேலைக்கு ஆகாது. அவற்றின் விருப்பம் போல உலாவ
அனுமதிக்க வேண்டும். அடைத்து வைக்கப்படும் பூனைகளுக்கு டிபி நோய் வந்து, சீக்கிரமே இறந்துவிடும்.

மேலும் -
பூனை தன்னுடைய கழிவை மணற்பாங்கான இடங்களில்தான் கழிக்கும். பின்னர் அதுவே மண்ணைப் போட்டும் மூடிவிடும். நீங்கள் வளர்க்கும் இடத்துக்கு அருகே இதுபோன்ற இடம் இருக்கா என்பதைப்  பார்த்துக் கொள்ளுங்கள். நாய்க்கு வெட்டுவது மாதிரி பூனைக்கு கால்நகங்களை வெட்டிவிடக் கூடாது. அவ்வாறு வெட்டினால் பயந்துப்போய் இருட்டான இடத்துக்குப் போய் ஒளிந்துக் கொள்ளும். நகம்  மீண்டும் வளர்ந்த பின்னரே வெளியே தலைகாட்டும்.ஆண் பூனைகளை வளர்ப்பவர்கள் அவற்றின் விதைப்பைகளை நீக்கிவிட்டு வளர்ப்பது நல்லது. இல்லையேல் வீட்டில் கண்ட இடங்களில் சிறுநீர் கழித்து  அசுத்தமாக்கும். வீடும் துர்நாற்றம் வீசும்.பெண் பூனைகளை வளர்க்க நினைப்பவர்கள், அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்து வளர்க்கலாம். இல்லையேல் சினைப்பருவக் காலத்தில் தரையில் கிடந்து  புரளும். எப்போதும் கத்திக்கொண்டு வயிற்றுவலி வந்தது போல துடிக்கும்.

முதுகுத்தோலை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு, மற்ற கையினால் நான்கு கால்களையும் கெட்டியாகப் பிடித்துத் தூக்குவதே பூனையைக் கையாளும் முறை.நாய்கள் சாப்பிடுவது போல எந்த  உணவைக் கொடுத்தாலும் இவை சாப்பிடாது. முட்டை, இறைச்சி வகைகளை விரும்பி உண்ணும். பூனைக்கு பால் பிடிக்கும் என்பதைத் தனியாக சொல்லத் தேவையில்லை. வைட்டமின் ஏ சத்து,  கால்சியம் ஆகியவற்றை உணவு வகைகளோடு சேர்த்துத் தரப்பட வேண்டும்.பூனைக்கு நோயென்று தெரிந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் காட்ட வேண்டும். மற்ற விலங்குகளுக்கு தரப் படுவதைப்  போல மடியில் வைத்து வாய் வழியாக பூனைக்கு மருந்து தரக்கூடாது. மருந்துக் கொடுப்பவரை அது கடித்து விடக்கூடிய அபாயம் உண்டு. அதன் உடல் மீது களிம்பு போன்ற மருந்துகளையும் பூசு  வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதுவே தன் உடலை நக்கி, அந்த மருந்தின் விஷத்தன்மையால் பாதிக்கப்படலாம்.
டாக்டர் வி.ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறையின் முன்னாள் இயக்குநர்.

Tags : மியாவ் மியாவ்
× RELATED தாத்தா சொல்லைத் தட்டாதே! : முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல