கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண உதவி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதியதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் கொரோனா நிதியுதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை நம்பிய பல கலைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் 6,810 கலைஞர்கள் பயன் பெறுவர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க ஏதுவாக முறையே முதல் தவணையாக ரூ. 3.73,85,000 ஆயிரம் நிதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: