தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை..!

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைநகர் டெல்லியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலை தடுக்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், பம்பர் சலுகையை அறிவித்துள்ளார். அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களின் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் தலைநகர் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துகளில் பயணம் செய்யும் பணிகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

முழு ஊரடங்கு போடுவதற்கான எந்தஒரு முகாந்திரமும் இல்லை ஏனென்றால் நேற்று முதல்வர் கூறுகையில் தலைநகரில் முழு ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை; அதேபோல தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: