×

தாலி செயினை பறிக்க முயன்றபோது தடுத்ததால் கர்ப்பிணியை சரமாரி தாக்கி நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்: சிசிடிவி காட்சி வைரல்

பல்லாவரம்: பல்லாவரத்தில் வீட்டின் முன்பு நின்றிருந்த கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்றபோது, தடுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன் அவரை சரமாரி தாக்கி சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரை சேர்ந்தவர் கீதா (24).  கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டு வாசல் அருகே  நின்று கொண்டிருந்தார். அப்போது, 2 வாலிபர்கள் அங்கு பைக்கில் வந்தனர். அவர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கீதா கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றான். சுதாரித்துக்கொண்ட கீதா, தாலி செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு, கொள்ளையனுடன் போராடினார்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கீதாவை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கி, சாலையில் தரதரவென இழுத்து சென்று செயினை பறிக்க முயன்றான். வலி பொறுக்க முடியாமல்  கீதா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதனைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களிடம்  போராடிய கீதாவிற்கு கை, கால்களில் கடுமையான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில்  உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : The robber who hit the pregnant woman with a volley and dragged her to the middle of the road after she was stopped while trying to snatch the chain: CCTV footage goes viral
× RELATED திமுக அமோக வெற்றிக்கு காணிக்கை நாக்கை...