டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு தலைமை காவலர் மிரட்டல்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

பெரம்பூர்: மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் மாமூல் கேட்டு பார் உரிமையாளரை தலைமை காவலர் மிரட்டும் ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாக பரவிவருகிறது. சென்னையில் டாஸ்மாக் கடையுடன் செயல்படும் பெரும்பாலான பார்களில் விதிமீறி 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால், இதை கண்டுகொள்ளாமல் இருக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை பார் உரிமையாளர்களால் வழங்கப்படுகிறது. இதில், பெரும்தொகை இன்ஸ்பெக்டருக்கும், மீதமுள்ள தொகை உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட செம்பியம் காவல் நிலைய பகுதியில் உள்ள 4 பார்களை நிர்வாகித்து வரும் பார் உரிமையாளரிடம், செம்பியம் காவல் நிலைய தலைமை காவலர் ஒருவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார் உரிமையாளரை செல்போனில் அழைத்த தலைமை காவலர், அழைப்பை எடுத்ததும் பேச தொடங்குகிறார். அப்போது, உங்கள் குரல் சரியாக கேட்கவில்லை, என பார் உரிமையாளர் கூறுகிறார். அதற்கு தலைமை காவலர், ‘அதற்கு தான் சொன்னேன். புதிய செல்போன் வாங்கித் தாருங்கள் என்று,’ என தனது பேச்சை தொடங்குகிறார்.

‘இங்கிருந்த ஆய்வாளர் எழும்பூர் ரயில்வே துறைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.  தற்போது புதிதாக பெண் இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். அவர், மாமூல் வாங்க மாட்டார் என்று பார்த்தால், அவரும் மாமூல் கேட்கிறார். எனவே, மாதம்தோறும் தரவேண்டிய பணத்தை ஒழுங்காக கொடுத்து விடுங்கள்,’ என்கிறார். அதற்கு பார் உரிமையாளர், ‘முன்ன மாதிரியெல்லாம் தற்போது வருமானம் வருவதில்லை, கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் சார்,’ என்று தாழ்ந்த குரலில் பேசுகிறார். ஆனால், அதை ஏற்காத தலைமை காவலர், ‘நீங்கள் கொடுப்பதை நான் அப்படியே இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விடுகிறேன். இதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றால் இன்ஸ்பெக்டரிடம் நேரில் வந்து பேசுங்கள்,’ என்கிறார்.

தொடரந்து, ‘இன்று பணம் வேண்டும்’ என தலைமை காவலர் கேட்க, அதற்கு பார் உரிமையாளர், ‘நான் இன்று வெளியில் இருக்கிறேன். நாளை மறுதினம் பணம் தருகிறேன்,’ என்று கூறி இணைப்பை துண்டித்து விடுகிறார்.  இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது டாஸ்மாக் பார்களில் குடிமகன்களால் ஏதாவது ஒரு பிரச்னை கண்டிப்பாக வரும். தினமும் குடிமக்கள் குடித்துவிட்டு தகராறு செய்வது, ரவுடிகள் மாமுல் கேட்பது இதையெல்லாம் அவ்வப்போது சரிசெய்ய மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பார் உரிமையாளர்களிடம் இருந்து போலீசார் வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 12 பார்கள் இயங்கி வருவதாகவும், இதில் பார் ஒன்றுக்கு ரூ.6,000 வீதம் வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட ஒரு பார் உரிமையாளர் 4 பார்களை வைத்துள்ளதால் செம்பியம் தலைமை காவலர் அவரிடம் ரூ.24 ஆயிரம் பேரம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள அனைத்து பார்களில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு செல்கிறது. இதில் காவல்துறையில் உள்ள சாதாரண காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை பணம் செல்வது வாடிக்கையாக உள்ளது.

Related Stories: