மதுரையில் கொரோனா பணிக்காக ஜி.ஹெச் சென்ற டாக்டரை நடுரோட்டில் தாக்கிய போலீசார்: புகார் கொடுத்தால் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பணிக்கு சென்ற ஓமியோபதி டாக்டர் போலீசாரால் நடுரோட்டில் தாக்கப்பட்டார். இதுகுறித்து இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்த மருத்துவரை, ‘‘பொய் வழக்கு போட்டு வாழவிடாமல் செய்வோம்’’ என போலீசார் மிரட்டிய சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, கூடல்நகர் கலைவாணன் நகரை சேர்ந்தவர் தமிழரசன். ஓமியோபதி டாக்டர். இவர் மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா அவசரப்பிரிவில் பணியாற்றி வருகிறேன். கடந்த 10ம் தேதி இரவு டூவீலரில் கொரோனா பணிக்கு சென்று கொண்டிருந்தேன். பீபி.குளம் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சந்திப்பில் எஸ்ஐ மற்றும் மப்டியில் இருந்த போலீசார் எனது டூவீலரை நிறுத்தினர்.

அவர்களிடம், எனது ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் ஆர்சி புத்தகம், வாகன காப்பீடு ஆகியவற்றை காண்பித்தேன். அதனை வாங்கி வைத்துக்கொண்டு, என்னை அங்கேயே நிற்கும்படி கூறினர். நான் அவர்களிடம், ‘‘நான் டாக்டர் என அடையாள அட்டையை காட்டி, கொரோனா அவசரப்பணிக்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆவணங்களை சரி பார்த்து அனுப்பவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். ஆனால், அங்கிருந்த போலீசார், என்னிடம், தகாத வார்த்தைகளை பேசி மிரட்டினர். மேலும் நான் முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி அபராதம் விதித்தனர். என்னை ரோட்டில் வைத்து ஆக்ரோஷமாக மாறி, மாறி முகத்தில் அடித்தனர்.

பின்னர் என்னை வலுக்கட்டாயமாக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்றனர். அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார விடாமலும், தண்ணீர் கூட கொடுக்காமல் நிற்க வைத்தனர். விசாரணை என்ற பெயரில் ஒருவர் மாற்றி, ஒருவராக வந்து மிரட்டினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டரிடம் கூறினேன். இதனையறிந்து, என்னை தாக்கிய எஸ்ஐ மற்றும்  போலீசார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். ‘‘மரியாதையாக பிரச்னை செய்யாமல் ஓடி விடு. இல்லையேல், பொய் வழக்கு போட்டு, வாழ விடாமல் செய்து விடுவோம்’’ என மிட்டினர்.

போலீசார் தாக்கியதில் காயமடைந்த நான், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை வெவ்வேறு நபர்கள் வந்து மிரட்டி செல்கின்றனர். கொரோனா அவசரப்பணிக்கு சென்று கொண்டிருந்த என்னை தடுத்து நிறுத்தி, அனைத்து ஆவணங்களையும் காண்பித்த பிறகும், என்னை ஒரு டாக்டர் என்றும் பாராது ரோட்டில் வைத்து தாக்கியும், புகார் கொடுத்தால், பொய் வழக்கு பதிவு செய்து வாழவிடாமல் செய்து விடுவோம் என்றும் மிரட்டிய தல்லாகுளம் எஸ்ஐ மற்றும் மப்டியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: