தாமரைக்கு ஓட்டு குறைவு என கூறியதால் ஆத்திரம் பாஜ நிர்வாகி மனைவியை மிரட்டிய திருக்கோவிலூர் வேட்பாளர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி செல்லம்மாள் (30). இவர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரபு, திருவெண்ணெய்நல்லூர் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 8ம் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் பிரபுவை செல்போனில் தொடர்பு கொண்ட திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளரும், விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவருமான கலிவரதன், தேர்தல் எப்படி நடந்து முடிந்தது, என்றார். மேலும் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடப்பதாக கூறினார். பிறகு பகல் 12 மணிக்கு மீண்டும் எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்கள் ஊரில் பாஜகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கும் என கேட்டார்.

அதற்கு எனது கணவர் தாமரைக்கு ஓட்டு குறைவாகத்தான் பதிவாகியிருக்கும் என்றார். உடனே கலிவரதன், என் கணவரை ஆபாசமாக திட்டினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு எனது கணவர் வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் அன்றிரவு 8.30 மணிக்கு கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கையில் தடியுடன் எனது வீட்டில் நுழைந்து எனது கணவரை தேடினர். அவர்களை தடுக்க முயன்ற என்னை ஆபாசமாக திட்டி தடியை காண்பித்து கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றதாக மனுவில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பாஜக வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: