×

ராணா, திரிபாதி அதிரடி அரை சதம் சன்ரைசர்சுக்கு 188 ரன் இலக்கு

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர்களாக நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் களமிறங்கினர். சந்தீப் வீசிய 4வது ஓவரில் ராணா ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 53 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

கில் 15 ரன் எடுத்து (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ரஷித் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ராணாவுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, கொல்கத்தா ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ராணா 37 பந்திலும், திரிபாதி 28 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது. திரிபாதி 53 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஆந்த்ரே ரஸ்ஸல் 5 ரன் எடுத்து ரஷித் சுழலில் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணா 80 ரன் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி முகமது நபி பந்துவீச்சில் விஜய் ஷங்கரிடம் பிடிபட்டார். அடுத்த பந்திலேயே கேப்டன் இயான் மார்கன் (2 ரன்) பெவிலியன் திரும்ப, கொல்கத்தா அணி திடீர் சரிவை சந்தித்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்திருந்த அந்த அணி, 160 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் இறங்க, கேகேஆர் ஸ்கோர் மீண்டும் வேகம் எடுத்தது. புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஷாகிப் ஹசன் (3 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 22 ரன்னுடன் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் பந்துவீச்சில் ரஷித் கான், முகமது நபி தலா 2 விக்கெட், நடராஜன், புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது. விருத்திமான் சாஹா, கேப்டன் வார்னர் இருவரும் துரத்தலை தொடங்கினர். வார்னர் 3 ரன் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கார்த்திக் வசம் பிடிபட, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.


Tags : Rana ,Tripathi , Rana, Tripathi Action Half-Century Sunrisers 188-run target
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...