மேற்குவங்கத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் முதன்முறையாக வரும் 14-ம் தேதி ராகுல் பிரச்சாரம்: சூடுபிடிக்கிறது தேர்தல் களம்

டெல்லி: மேற்குவங்கத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், முதன்முறையாக வரும் 14ம் தேதி ராகுல்காந்தி பிரசாரம் செய்ய வருவதாக அக்கட்சியின் நிர்வாகி தெரிவித்தார். மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி உள்ள நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி கிராமப்புறங்களில் தங்களது செல்வாக்கை செலுத்தி வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 92 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த 2016ல் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் வென்றது. ஆனால், 2019ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குசதவீதம் 4 சதவீதமாக குறைந்தது.

ஆனால், புருலியா, மால்டா மற்றும் முர்ஷிதாபாத் போன்ற சில மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மாநிலத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முதன்முறையாக தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 14ம் தேதி மேற்குவங்கம் செல்கிறார். கோல்போகர், மதிகாரா - நக்சல்பாரி பகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதுகுறித்து மேற்குவங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாத்தா கூறுகையில், ‘கொரோனா தொற்று பரவலால் தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பது தவிர்க்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது ராகுல் பிரசாரத்திற்கு வருவது உறுதியாகி உள்ளதால் கட்சியினருக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ஜெய்வீர் ஷெர்கில், ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்து வந்தனர்’ என்றார். இருந்த போதும், கேரளாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஆளும் இடது முன்னணி கூட்டணியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். அதனால், மேற்குவங்க இடதுசாரி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடனான பிரசாரத்தை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: