திருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை காவல் நிலையத்தில் கட்டி வைத்து பராமரிக்கும் போலீஸ்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில், திருட்டு வழக்கில் பறிமுதல் செய்த வெள்ளாட்டுக்கு தீவனம் போட்டு, போலீசார் பராமரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் சாலை சிஎச்பி காலனி அருகே, 2 இளைஞர்கள் ஒரு வெள்ளாட்டை பைக்கில் வைத்துக்கொண்டு வந்தனர். சந்தேகமடைந்த போலீசார், பைக்கை நிறுத்தும்படி தெரிவித்தனர். சிறிது தூரம் சென்று நிறுத்திய இளைஞர்கள், பைக்குடன் வெள்ளாட்டை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஆடு மற்றும் பைக்கை, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாலிபர்கள் வெள்ளாட்டை திருடி வந்து இருக்கலாம்.

மேலும், அவர்கள் வந்த பைக்கும் திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஸ்டேஷனுக்கு வெளியே வெள்ளாட்டை கட்டி வைத்துள்ள போலீசார், அதற்கு தீவனம் மற்றும் தண்ணீர் கொடுத்து பராமரித்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை. நாளை ஒரு நாள் மட்டுமே நீதிமன்றம் செயல்படும். 13, 14ம் தேதி விடுமுறை. இதனால் வெள்ளாட்டை, வேறு வழியின்றி போலீசார் பராமரித்து வருகின்றனர். காவல் நிலையம் முன்பு வெள்ளாட்டை கட்டிவைத்து வளர்ப்பதை, அவ்வழியாக செல்பவர்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

Related Stories: