ஜப்பான் நிறுவனத்துடன் எய்ம்ஸ் நிதி ஒப்பந்தம் கையெழுத்தா?.. மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த கோரிக்கை

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைதானா என மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2 ஆண்டுகளை கடந்தும் இதுவரை வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ளன. இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எல்லாம் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாணவர்கள் சேர்க்கையும் நடக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான நிதியை, ஜப்பான் நாட்டின் ஜைகா நிறுவனத்திடம் கடன் பெற்று பணி துவக்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கடந்த மார்ச் மாதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்டு இருந்தார். அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் நிறுவனத்தில் இருந்து நிதி பெறும் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? இதற்கான இலக்கு எப்போது? ஒப்பந்தம் செய்யப்பட உள்ள கடன் தொகை எவ்வளவு? எய்ம்ஸ் திட்டத்திற்கான மொத்த திட்ட மதிப்பீடு என்ன?

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்ட மதிப்பீடு என்ன? ஏதேனும் திட்ட மதிப்பீடு, ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறதா? ஜைகா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்வதில் பிரச்னை இருக்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பு ரூ.1,264 கோடியாக இருந்தது, ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டது எதனால்? அதிகப்படியான கட்டிடங்கள் வருகிறதா? இப்படி பல கேள்விகளை கேட்டிருந்தார். மார்ச் மாதம் அனுப்பிய ஆர்டிஐ கடிதத்திற்கு தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. இதில், ‘‘இந்திய அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது.

கடன் விபரங்கள் மற்ற தகவல்கள் எல்லாம் எங்கள் அலுவலகத்திற்கு விபரம் கிடைத்த பிறகே பகிர முடியும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற பாண்டியராஜா கூறும்போது, ‘‘ஜைகா நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதா? என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டபோது, டிசம்பரில் தெரிவிப்பதாகவும், பிறகு மார்ச் மாதம் என கூறப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கேட்டதற்கு தற்போது வந்துள்ள பதிலில் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தானதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.

மத்திய, மாநில அரசுகள் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்த ஒப்பந்தம் குறித்து அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால் டெண்டர் நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவில் துவக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: