×

வடமாநிலங்களில் ஊரடங்கு: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி காடா துணி தேக்கம்

சோமனூர்: வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காடா துணிகள் விற்பனையாகாமல் ரூ.100 கோடி அளவில் தேங்கியுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகக்கூடிய 20எஸ், 30எஸ், 50எஸ், 40எஸ் உள்ளிட்ட கிரே காடா காட்டன் துணி பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பாலி, பலோத்ரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கல்கத்தா, புனே ஆகிய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகள் ஜவுளி துணியை தரம் பிரித்து, சாயம் ஏற்றுவது அச்சிடுவது, வெண்மைபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து அந்த துணிகளை உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்   கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு துணிகள் அனுப்பப்படுவதில்லை. ஒரு சில பகுதிகளில் துணி விலை குறைத்து கேட்கின்றனர். இதனால் 2 வாரங்களாக மொத்த வியாபாரிகள் குறைந்த அளவு துணியை மட்டுமே வாங்கி வந்தனர். கடந்த ஒரு வாரமாக, ஜவுளி துணியை வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால் சுமார் 5 கோடி மீட்டர் கிரேட் காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவில் காடா துணிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

இது குறித்து சோமனூர் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘வட மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து ஜவுளி துணியை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் முழுமையாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி ஆகக்கூடிய ஜவுளி துணி அந்தந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இருப்பில் வைத்து வருகின்றனர். இதனால் பணப்புழக்கம் முழுமையாக தடைபட்டுள்ளது. விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வங்கி கடன் செலுத்தவும், வாடகை உள்ளிட்ட செலவினங்களை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம்,’’ என்றனர்.

இந்நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய நிலைமையை சரிசெய்ய உற்பத்தியை முழுமையாக நிறுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு பாவு நூல் கிடைக்காமல் விசைத்தறி நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Northern States ,Kata ,Kowai, Tirupur , Curfew in northern states: Rs 100 crore quota cloth stagnation in Coimbatore and Tiruppur districts
× RELATED ‘ஹோலி’ கொண்டாட்டம் என்ற பெயரில்...