கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோய்க்கு 6 வயது சிறுமி பலி: மக்கள் பீதி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் நோயும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இந்த நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாயினர். கேரள அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஷிகெல்லா பாதித்து கடந்த மாதம் 15ம் தேதி 55 வயதான முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயநாடு நூல்புழா பகுதியை சேர்ந்த சுனில்குமார் மகள் மஞ்சரி என்ற 6 வயது சிறுமி, பத்தேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் ஷிகேல்லா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சரி பரிதாபமாக இறந்தார்.

Related Stories:

>