வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பு பேண்ட் வாத்தியம் இசைத்து கோரிக்கை வைத்த கலைஞர்கள்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியில், சென்னை பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கூட்டு கூழல் இசை நல சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை நடந்தது.  இதையடுத்து நிருபர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னப்பதாஸ் கூறுகையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எந்தவித திருவிழாக்களும், சுபநிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது 2 மாத காலமாக சிறுசிறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

மீண்டும் கொரோனா  தொற்றால் 10ம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தால் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும்.  எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. ஆண்டின் முதல் 4 மாதங்கள் வரும் வருமானத்தை வைத்துதான் பிள்ளைகளின் படிப்பு கட்டணம், குடும்ப செலவு போன்றவற்றை கவனித்து வருகிறோம். 2020ம் ஆண்டு பள்ளி படிப்பு, குடும்ப செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். பேண்ட் வாத்திய தொழிலை நம்பி தமிழ்நாட்டில் ஏராளமான இசை கலைஞர்களின் குடும்பத்தினர் வாழ்கின்ற னர். எனவே, அரசு நெறிமுறைபடி தொழில் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றார். சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து சினிமா படங்களில் வரும் சோக பாடல்கள் இசைத்து தமிழக அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories: