சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் நிழல்குடை, கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் பொது கழிவறை வசதியில்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சுங்குவார்சத்திரம் பகுதியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்றால் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிலையத்தில் நிழற்குடை, பொது கழிவறை இல்லாததால் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவிக்கின்றனர். பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு சென்றனர். ஆனால் இதுவரை பணி துவங்கப்படவில்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் நிழற்குடை மற்றும் பொதுகழிவறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.

Related Stories: