பராமரிப்பின்றி இடியும் நிலையில் கிணறு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாளேரி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஒரு ராட்டின கிணறு கட்டப்பட்டது. அந்த நீரை மக்கள் குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர்.  எனினும், கடந்த சில ஆண்டுகளாக இந்த ராட்டின கிணறு முறையான பராமரிப்பின்றி பாழடைந்து, தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, மிக விரைவில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் இக்கிணற்றில் இருந்து இரவு நேரங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட பல்வேறு விஷ ஜந்துக்கள் அருகே உள்ள வீடுகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.  இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அந்த கிணற்றை சீரமைப்பதில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த ராட்டின கிணற்றை விரைவில் சீரமைத்து, கோடை காலத்தின்போது குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க பயன்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: