சென்னை விமானநிலையத்தில் துபாய் விமானத்தில் இயந்திர கோளாறு: பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு துபாய் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார்நிலையில் இருந்தது. அதில் 182 பயணிகள் செல்லவிருந்தனர். இவர்கள் அனைவரும் அதிகாலை ஒரு மணிக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தனர். அப்போது, விமானத்தின் இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என விமானி பரிசோதித்தார். அப்போது ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அப்படியே வானில் விமானம் பறப்பது ஆபத்து என்பதை உணர்ந்தார். இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். மேலும், அந்த விமானம் புறப்படுவதற்கு தாமதமாகும் என விமானி அறிவித்தார்.

பின்னர் விமான பொறியாளர்கள் குழுவினர், அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து அதில் செல்ல வேண்டிய பயணிகள் ஓய்வறையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தங்கவைக்கப்பட்டனர். இதனால் தாங்கள் குறித்த நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். அந்த விமானத்தின் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியாததால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றிரவு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவர் என தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் செல்ல வேண்டிய 182 பயணிகளும் சென்னை நகர தனியார் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: