தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் பேரிழப்பாகும்..! ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மாதவராவ்  இவர் வேட்புமனுதாக்கல் செய்ததிலிருந்தே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 63. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்: ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் - சட்டமன்ற உறுப்பினராக தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் - அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: