வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... தர்மலா ஸ்ரீ

குருவிகளைக் கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புரியவரும். குச்சிகளை எடுத்து வந்து தனக்கான ஒரு கூட்டை கட்ட ஆரம்பிக்கும்… கூட்டைக் கட்டி முடிக்கும் நேரத்தில் காற்றில் கூடு விழுந்தாலோ கிளை முறிந்து விழுந்தாலோ திரும்பவும் ஒரு புதிய கூட்டைக் கட்டும். எதுவரை கட்டுமென்றால், கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சி பொறித்து தன் இனத்தை வாழவைக்கும்வரை அதை செய்துகொண்டேயிருக்கும்.

ஏனெனில், அதற்கு தெரிந்தது இரண்டே இரண்டு விஷயம்தான், ஒன்று விடாமுயற்சி, மற்றொன்று வாய்ப்புகள் இன்னும் உண்டு என்ற நம்பிக்கை. எந்த குருவியாவது 5 தடவை முயற்சி செய்து ஐந்து தடவையும் கூடுகள் கீழே விழுந்துவிட்டதே இனிமேல் வாழ்க்கை முழுவதும் கூடே கட்டக்கூடாது என்று நொந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறதா? இல்லையே… அப்படியானால் முயற்சித்தால் வெற்றி கண்டிப்பாக உண்டு என்பதுதானே சாத்தியம். அப்படி ஒரு விடாமுயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் தொடர்ச்சியாக முயற்சி செய்து வெற்றிபெற்ற சேலம் மாவட்டம் பேளூர் கரடிப்பட்டி, கொட்டவாடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த தர்மலா ஸ்ரீ தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ ஒருவரின் கனவு என்பது எப்போதுமே சின்னதாக இருக்கக்கூடாது, பெரிதாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் எனது ஐ.ஏ.எஸ். கனவு ஆரம்பித்தது. நான் சின்ன பெண்ணாக இருக்கும்போது நீ என்னவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று அப்பா கேட்டபோது, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்றேன். ஏன் என்றபோது.. ஒரு கலெக்டர் நினைத்தால் ஒரே கையெழுத்தில் ஒரு ஊரைக் காப்பாற்ற முடியும் என்றேன்.

காரணம் அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது எங்கள் கிராம மக்களுக்கு ஆடு, மாடு வாங்கிக் கொடுத்து பிழைப்புக்கு வழிவகுக்க வங்கி அதிகாரிகளிடம் பேசினார். ஆனால் அவர்கள் தாமதித்தனர். உடனே அப்பா நிரஞ்சன் மார்டி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இது குறித்து பேசி அதற்கான வழிவகுத்தார்.

அவர் போட்ட ஒரு கையெழுத்து எங்கள் கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. எங்கள் பிழைப்புக்கான வாழ்வாதாரம் கிடைத்தது. அந்த நாள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது எனது கனவாக மாறிவிட்டது. என் கிராமத்தை போலவே பல கிராமங்களை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது.

பள்ளியில் படிக்கும் போது இறையன்புவின் ‘நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்’ என்ற புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஒரு தனியார் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து முடித்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டாண்டுகள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஆனால், ஐ.ஏ.எஸ் கனவு என்னை தூங்கவிடாமல் செய்தது. 2014ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு எனது லட்சியக் கனவின் பாதையை நோக்கி பயணித்தேன்.

சென்னையில் இதற்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். முதல் இரண்டு முறை முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப்பின் என் தவறுகளை ஆராய்ந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மூன்றாவது முயற்சியில், முதல்முறையாக நேர்முகத் தேர்வு வரை சென்றேன்.

இருப்பினும் அந்த ஆண்டு நான் மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டேன். அதற்குப்பின் எனது குடும்பத்தினர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையும் உற்சாகமும் 5-வது முறை தேர்வு எழுத வைத்தது. இந்த ஆண்டு வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 409வது இடமும் தமிழக அளவில் 10வது இடமும் பிடித்தேன்.

எல்லோரையும்போல் தோல்வியடையும்போது மனவருத்தமடைந்தேன். ஆனால், இந்தத் தேர்வு முறை எனக்கு மனவலிமையும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற மன உறுதியைக் கொடுத்தது. விடா முயற்சியும், தவறுகளை திருத்திக்கொண்டும் சிறிய சிறிய முன்னேற்றம் மூலம் எனது கனவு சாத்தியமானது.

எனது வெற்றி என்னையும், என் குடும்பத்தினரையும் உறவினர்களையும் நண்பர்களையும் பெருமையடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் எனது கிராமத்தையும் பெருமையடைய செய்தது. நான் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி அடைந்ததற்கு என் கிராமமே கொண்டாடியதை பார்க்கும் போது இன்னும் என்னை பொறுப்புமிக்க மனுசியாக மாற்றியுள்ளதை உணர்ந்தேன்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வைப் பொறுத்தளவில் கடினமானது என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால், திட்டமிட்டு சரியான புத்தகத்தோடும், சரியான வழிநடத்துபவர்கள் உதவியோடும் பயின்றால் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம்.

தினமும் 10 அல்லது 12 மணி நேரம் சரியாக படிப்பது அவசியம். வேலைக்கு செல்பவர்கள் திட்டமிட்டு 6 மணி நேரத்தை ஒதுக்கலாம். ஒரு ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பது உதவியாக இருக்கும். என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிப்பது அடிப்படையானதாகும்.

இத்தேர்வில் நான் வரலாற்றை விருப்பப்பாடமாக எடுத்தேன். பலர் வரலாறு என்பது போரடிக்கும் பாடம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வரலாறு போன்று ஆர்வம் ஊட்டக்கூடிய வேறு பாடம் இல்லை என்றே சொல்வேன். பல கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவில் வரலாற்றுப்பூர்வ கட்டிடங்கள் மற்றும் இடங்களுக்கு பஞ்சமேயில்லை.

எனது பணியில் முதன்மையான முக்கியத்துவம் தண்ணீருக்காகத்தான் இருக்கும்.

கிராமப்புறத்திலிருந்து வந்ததனால் கிராமப்புற மேம்பாடு பற்றியதும் எனது செயல்பாடாக இருக்கும். அதற்கடுத்து மாணவர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் முயற்சி. ஏனெனில், எல்லோரிடமும் திறமை உள்ளது, அதை ஊக்குவிக்கத்தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

வலிமை உடலிலிருந்து வருவதில்லை, அசைக்க முடியாத மன உறுதியில் இருந்து வருகிறது. நமது மனதின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். வெற்றி இன்னும் வேகமாக கிடைக்கும். ஐ.ஏ.எஸ். என்ற பெருங்கனவு வெற்றிபெற்றுவிட்டாலும் அதன் மூலம் செயலாற்றக்கூடிய நீர் வளங்களை சரி செய்வது, கிராமப்புற மேம்பாடு என்பதுபோன்ற கனவுகள் பரந்துவிரிந்துகிடக்கின்றன’’ என்று புன்னகையோடு முடித்தார் தர்மலா ஸ்ரீ.

- தோ.திருத்துவராஜ்

Related Stories: