பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நாளை அதிகாலை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி ஊர்வலம், மஞ்சள் நீராடுதலுக்கு தடை

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நாளை அதிகாலை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராடுதலுக்கு கலெக்டர் கதிரவன் தடை விதித்துள்ளார். மேலும், நாளை நடக்கும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். இதில், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியை மாநகர் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வர். மூன்று கோயில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு மாநகரின் முக்கிய வீதி வழியாக கம்பத்தை பூசாரிகள் தோளில் சுமந்து ஊர்வலமாக வருவர். அப்போது மக்கள் திரளாக கூடி நின்று உப்பு, மிளகு தூவி வழிபடுவர். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இக்கோயில்களின் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான விழாவினை எளிமையாக நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதன்பேரில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கடந்த 6ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 7ம் தேதி மூன்று கோயில்களிலும் கம்பம் நடப்பட்டது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா மற்றும் சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டம் எளிமையாக நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாவிளக்கு மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10ம் தேதிக்கு(நேற்று) மேல் கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி இல்லை என உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் வகையறா கோயில் திருவிழா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், மீதமுள்ள கோயில் நிகழ்ச்சிகளை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் ஈரோடு கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு கொண்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக கலெக்டர் கதிரவன், கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற தடை விதித்து, கோயில் ஊழியர்களே புனித நீர் ஊற்ற உத்தரவிட்டார். மேலும், நாளை(12ம் தேதி) நடக்கும் கம்பம் பிடுங்கும் நிக்ழ்ச்சியை ஆகம விதிப்படி பக்தர்கள் கூட்டமின்றி அதிகாலை நடத்திடவும், கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டுக்கு தடை விதித்தும் கலெக்டர் உத்தரவிட்டார். இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறியதாவது:

 கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்களுக்கு புனித நீர், பால் ஊற்றுவது போன்ற நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இன்று(11ம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில்களில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பூஜை பொருட்களுக்கு அனுமதி இல்லை. நாளை(12ம் தேதி) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்ட கம்பம் எடுக்கும் நிகழ்வு, நாளை அதிகாலை 5.05மணிக்கு எடுக்கப்படுகிறது. கோயில் பூசாரிகள் மட்டும் இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கம்பம் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, மூன்று கோயில்களின் கம்பமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். இதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மஞ்சள் நீராட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories: