தோகைமலை அருகே ஆர்டிமலை- புழுதேரி செல்லும் சாலையோரம் மரண பள்ளம்: சீரமைக்க கோரிக்கை

தோகைமலை: தோகைமலை அருகே ஆர்டிமலையில் இருந்து புழுதேரி செல்லும் சாலையோரம் ஆபத்தான மரண பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் உள்ள ஆர்டிமலை பேருந்து நிறுத்தம் அருகே புழுதேரி மெயின் சாலை செல்கிறது. ஆர்டிமலை புழுதேரி மெயின் ரோட்டின் வழியாக திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலைக்கு இணைப்பாக உள்ளது. இதனால் கரூர், கோயம்புத்தூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குளித்தலை நெடுஞ்சாலைதுறை மேற்பார்வையில் சுமார் 1 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. புதிய தார்சாலை அமைக்கப்பட்டு 6 மாதங்களில் இருந்து ஆர்டிமலை புழுதேரி சாலையில் ஆங்காங்கே பழுதாகி பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்து வந்தது. இதில் சாலையின் பக்கவாட்டில் மழைநீர் அரிப்பு ஏற்பட்டு குழி ஏற்பட்டது. ஆனால் மழையின்போது ஏற்பட்ட குழிகளை நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிக்கின்றனர்.

இதுகுறித்து குளித்தலை நெடுஞ்சாலைதுறை பணியாளர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனங்கள் சாலையில் உள்ள குழிதெரியாமல் விபத்துக்கு உள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே ஆர்டிமலையில் இருந்து புழுதேரி செல்லும் சாலை அருகே ஆபத்தான குழியை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: