துவங்கியது கோடை சீசன் உடன்குடியில் பனைத்தொழில் ஜரூர்: விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி

உடன்குடி: தென் மாவட்ட பகுதிகளில் பனை சீசன் ஆரம்பித்துள்ளது. பனைத்தொழில் ஜரூராக துவங்கியுள்ளதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் மரமாக விளங்கும் பனை மரம் பல்வேறு பயன்களை தரவல்லது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் துவங்குகையில் பனை சீசன் ஆரம்பமாகும். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனைகிழங்கு, கருப்பட்டி, பனை ஓலை, மட்டை என பல்வேறு விதங்களில் பனையிலிருந்து பயன்பெற முடியும். தமிழகத்தில் வடமாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கில் பனை மரங்கள் உள்ளன. குறிப்பாக கற்பகத் தருவாகக் காட்சியளிக்கும் பனைமரங்கள் உடன்குடி மற்றும் சுற்று வட்டார நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. பெரும்பாலன மக்கள் பனைத்தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பருவமழை பொய்த்துப் போனதால் நெல், வாழை சாகுபடி முற்றிலும் அழிந்துபோனது.  மேலும் கடல்நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் நிலத்தடி நீர் உவர்ப்பானதோடு அதல பாதாளத்திற்கு சென்றது. பின்னர் பெய்யத் துவங்கிய பருவமழையை நம்பி மீண்டும் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.  இருப்பினும் கடுமையான வெயிலையும் தாக்குப்பிடிக்கக் கூடிய பனைமரங்களை நம்பி பனைத்தொழிலில் தனி அக்கறை காட்டி வருகின்றனர். உடன்குடியின் பெரும்பாலான பகுதிகள் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆண்டுக்கு 5 மாதம் மட்டுமே பனைத்தொழில் நடக்கும். மார்ச் இறுதியில் துவங்கும் பனை சீசன் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்தில் முடிந்து விடும். பனைத்தொழில் கடுமையான உடல் உழைப்பான தொழில். நாளொன்றுக்கு 3 நேரம் ஏறி இறங்கி பனையை பராமரிக்க வேண்டும்.

 பதநீர் இறக்குவதற்கு முன்னர் பனைமரத்தின் பாலைகளைச் சீவி அவற்றை முறையாகப் பராமரித்து, கலசங்கள் கட்டி வைத்து, சுண்ணாம்பு தடவி அதனை பக்குவப்படுத்தி பதநீர் இறக்குவர். பனை ஏறுவதற்கு தனி பயிற்சி பெற்ற கன்னியாகுமரி, நாகர்கோவில், வேம்பார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பனைத்தொழிலாளர்கள் சீசன் காலத்தில் உடன்குடிக்கு வருகை தருவது வழக்கம். முன்பணமாக லட்சக்கணக்கில்  சம்பளம் அளித்து இங்கு வரவழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிக்கு ஏற்ப கருப்பட்டியும் சன்மானமாக வழங்கப்படும்.  உடன்குடி பகுதியிலுள்ள காரத்தன்மையுள்ள மணற்பகுதி பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீரானது நல்ல தித்திப்புடன் இருப்பதாலும், மருத்துவ தன்மைகள் நிறைந்து காணப்படுவதாலும் அதிகாலையிலேயே இதை ஏராளமானோர் வாங்கி பருகுவர். பதநீரை நல்ல பக்குவத்துடன் இறக்கி பெரிய தாட்சியில் காய்ச்சி இறுதியில் வரும் கூப்பயனியை மணலில் தேங்காய் சிரட்டையில் ஊற்றி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.

 உடன்குடி பகுதியிலுள்ள ஒருவகை காரத்தன்மையுள்ள மணல் மற்றும் குலசேகரன்பட்டினம், மணப்பாடு கடற்கரை பகுதியில் கிடைக்கும் சிப்பி, சுண்ணாம்பு ஆகியவற்றால் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு நல்ல சுவையாக இருக்கும். இவ்வாறு தயாரிக்கும் கருப்பட்டிகள் ஆண்டுகள் பல ஆனாலும் கெட்டுப் போகாது. இதனால்தான் உடன்குடி கருப்பட்டிக்கு உலக அளவில் இன்று வரை மவுசு உள்ளது.  பலரின் வீட்டில் அடுப்பு எரிவதற்கு காரணமாக இந்த பனைத்தொழில் தற்போது அழிந்து வரும் தொழிலில் ஒன்றாக உள்ளது. காரணம் வருவாய் குறைந்து போனதால் ஒரு சிலர் மட்டுமே பனைத்தொழில் செய்து வருகின்றனர். கடுமையான உடல் உழைப்பு இருந்தாலும் போதிய லாபம் இந்த தொழிலில் இல்லை. மேலும் பனைத்தொழிலாளர்களுக்கு போதிய கடன் உதவி, அரசு சலுகைகள் வழங்காததால் தற்போது பெரும்பாலான மக்கள் இத்தொழிலை செய்வதில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பனைத்தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: