தேர்தல் நிதி தரமறுத்ததால் தொழிலதிபரின் கம்பெனி முன்பு கழிப்பிடம் கட்ட பூமி பூஜை: பாஜ, அதிமுகவினர் தேர்தல் விதி மீறல்

சூலூர்:  சூலூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜலட்சுமி தேவராஜ் என்பவர் இருந்து வருகிறார். இப்பகுதியில் சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி சட்டமன்ற தேர்தல் பரப்பரைக்கு வெங்கிட்டாபுரம் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள ஏ.டி.காலனி மக்கள் தங்களுக்கு பொது கழிப்பிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்த பிறகு கட்டித்தருவதாக கந்தசாமி கூறிச்சென்றார். இந்நிலையில் தேர்தல் நாள் முடிந்த மறுநாளே தேர்தல் நடத்தை விதி மீறி அங்குள்ள தனியார் நிறுவனத்தின் முன்பு பொதுக்கழிப்பிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அதில் சின்னியம்பாளையம் ஊராட்சி மன்றதலைவர் ராஜலட்சுமின் கணவர் தேவராஜன், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவருமான கந்தவேல், ஊராட்சி ஒன்றிய இன்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த ஊராட்சிக்கு பாலம் கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு  சுமார் 15 லட்சம் ரூபாய் அளித்துள்ளோம். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பாஜ, அதிமுகவினர் தேர்தல் நிதி கேட்டனர். நாங்களும் கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ளோம். கட்சிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் நிதி தரமாட்டோம் என்று கூறிவிட்டோம். அதை மனதில் வைத்துக்கொண்டு இப்பகுதி பாஜ கவுன்சிலர் மற்றும் அதிமுகவினர் எங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனம் முன்பு பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகளை துவக்கியுள்ளனர். இவர்கள் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள இடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தின் இரு வாசல்களுக்கு இடையே வருகிறது. நிறுவனத்தின் 2 கேட்டுகளுக்கு இடையில் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது.

 

இது குறித்து விஏஓவிடமும் அனுமதி வாங்கவில்லை. தேர்தல் நன்னடத்தை விதிகள்  நடைமுறையில் உள்ள நிலையில் அதை மீறி செயல்பட்ட அதிமுகவினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், சூலூர் வட்டாட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்கு கம்பெனியின் உரிமையாளர் முகம்மது சுபையர் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம்’’ என கூறினர்.

Related Stories: