கொரோனா மீண்டும் பரவுவதால் தண்ணீர் பந்தல் திறக்க தயங்கும் தன்னார்வ அமைப்புகள், கட்சிகள்

புதுச்சேரி: கொரோனா 2வது அலை பரவுவதால் இந்தாண்டும் தண்ணீர் பந்தல்களை திறக்க   அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தயக்கம் காட்டி வருகின்றன. புதுச்சேரியில்   ஏப்ரல், மே கோடை காலத்தில் வெயில் உக்கிரம் அதிகரித்து வருகிறது. கடந்த   சில ஆண்டுகளாக மார்ச் முதல் வாரத்தில் இருந்தே அக்னியின் தீவிரத்தை மக்கள்   உணர முடிகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் இயற்கை மற்றும்   செயற்கை குளிர்பானங்களை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. மக்களின்   கஷ்டங்களை தீர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள்   ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் தண்ணீர்பந்தல்கள் அமைப்பது வழக்கம்.   முதலியார்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் நீர்- மோர் பந்தல்களும்   திறக்கப்படும். அங்கு முதியவர்கள், நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்களும்   பானங்களை அருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.

 ஆனால்   சட்டமன்ற தேர்தல் விதிகள் காரணமாக புதுச்சேரியில் ஏப்ரல் 2வது வாரமாகியும் இதுவரை முக்கிய சந்திப்புகளில் தண்ணணீர் பந்தல்கள் அமைக்கப்படவில்லை. தேர்தல்   முடிந்த நிலையிலும் திறக்கப்படாததால் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  கொரோனா  காலம் என்பதால் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், நோய்  தொற்று  பரவ தண்ணீர் பந்தல்களே காரணமாகி விடக்கூடாது என்பதை கருத்தில்  கொண்டும்  அரசியல் கட்சிகள் நீர், மோர் பந்தல்களை திறக்க ஆர்வம்  காட்டவில்லை என்று  தெரிகிறது.இதுபற்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம்  விசாரித்தபோது,  கடந்த காலங்களைபோல் தண்ணீர் பந்தல்களை இப்போது தங்களது  இஷ்டத்துக்கு யாரும்  தன்னிச்சையாக அமைக்க முடியாது. மாவட்ட நிர்வாகத்தின்  அனுமதி  தேவைப்படுகிறது. இதுபோன்ற சிரமங்களை ஏற்று மக்களுக்கு சேவையாற்ற   கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் தயக்கம் காட்டுகின்றன என்றனர்.

கடந்தாண்டும்   மார்ச் முதல் தேசிய, மாநில ஊரடங்கு அடுத்தடுத்து அமலில் இருந்ததால் கோடை   காலங்களில் மக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர். இதனால் தண்ணீர்   பந்தல்கள் கடந்தாண்டு திறக்க அவசியமற்ற நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: