கொரோனா அச்சத்திலும் போராட்டம்: டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 136 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..!

டெல்லி: டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 4 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் வீரியமாகி இருப்பதால் இந்த போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர்  கூறுகையில், ‘கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்துள்ளதால், ஒட்டுமொத்த நாடும், உலகமும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவர்களது உயிரும் எங்களுக்கு முக்கியம்’ என்று கூறினார். தற்போதைய கொரோனா சூழலில் விவசாயிகள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறிய தோமர், இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு வலுவான பரிந்துரையுடன் எப்போது விவசாயிகள் வந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நமது ஜனநாயக நாட்டில் விவசாயியோ, குடிமகனோ யாருக்கும் எந்த சந்தேகம் இருந்தாலும் அதை தெளிவுபடுத்தி தீர்வு காண வேண்டியது தங்கள் கடமை என அரசு நம்புவதாகவும் தோமர் கூறினார்.

இந்நிலையில் டெல்லி எல்லையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 136வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே ஜன. 25-ஆம் தேதிமுதல் இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காசிப்பூர், திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் உள்ள விவசாயிகள் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோருவதில் பிடிவாதமாக உள்ளனர், டெல்லியில் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>