ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை கல்லூரிக்கு சொந்தமானதா?

திருமலை: ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி பணத்தையும், ஒரு கிலோ தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆந்திரா- தெலங்கானா மாநில எல்லையான பஞ்சலிங்க சோதனைச்சாவடி அருகே கர்னூல் எஸ்பி பக்கீரப்பா உத்தரவின்படி, போலீசார் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த சேத்தன் குமார் என்பவர் வைத்திருந்த ஒரு பையில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் பணமும், ஒரு கிலோ தங்கம் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தன்னிடம் உள்ள பணம் சென்னையில் தனியார் மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது. தங்க நகைகள் ஐதராபாத் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி நகைக்கடைக்கு சொந்தமானது,’ என தெரிவித்தார்.

ஆனால் பணம், நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும், கர்னூல் மாவட்ட போலீசார் வழக்குப் பதிந்து, பணம் உரிய முறையில் வரி செலுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அல்லது ஹவாலா பணம் மற்றும் தங்க கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி, 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>