சட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் கேரளா அமைச்சர் ஜலீல் பதவியை பறிக்க வேண்டும்: லோக் ஆயுத்தா நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள உயர்கல்வி மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ஜலீல். அவரது உறவினர் அதீப். சவுத் இந்தியன் வங்கியில் முதுநிலை மேலாளராக பதவி வகித்து வந்தார். அவரை கடந்த 2018 அக்டோபர் 8ம் தேதி சிறுபான்மை வளர்ச்சி கழக பொதுமேலாளராக நியமித்து ஜலீல் உத்தரவிட்டார்.

இந்த நியமனத்தை எதிர்த்து முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவை சேர்ந்த முகமது ஷாபி லோக் ஆயுத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அமைச்சர் ஜலீல் தனது உறவினரை சட்ட விரோதமாக சிறுபான்மைத் துறையில் நியமித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறி இருந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து 2018 நவம்பர் 13ம் தேதி அதீப் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு லோக் ஆயுத்தா நீதிபதிகளான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பிரியக் ஜோசப், ஹாரூன் அல் ரஷீத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘அமைச்சர் ஜலீல் சட்ட விரோதமாக உறவினரை சிறுபான்மை வளர்ச்சி கழக பொதுமேலாளராக நியமித்துள்ளது நிரூபணமாகி உள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நியமனத்தை நடத்தி உள்ளார். இதனால், ஜலீலுக்கு அமைச்சர் பதவியில் தொடர உரிமையில்லை. எனவே, ேகரள முதல்வர், அவரை பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளனர். ஜலீல் உடனே பதவி விலக கேரள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

Related Stories:

>