×

தெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய கட்சி தொடங்குகிறார் சர்மிளா: 2023ல் ஆட்சியை பிடிக்க வியூகம்

அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அப்போது, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு, மே மாதம் ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இறந்தார். அவருக்கு பிறகு தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவருடைய மகனான ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்த்தார். ஆனால், காங்கிரஸ் அவருக்கு பதவி தரவில்லை. இதனால், அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி, தற்போது ஆந்திராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கிறார்.

இவருடைய சகோதரி சர்மிளா. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க பக்கபலமாக இருந்தார். தற்போது, ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக உள்ள தெலங்கானாவின் மீது சர்மிளாவின் பார்வை விழுந்துள்ளது. இங்கும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள அவர், இம்மாநிலத்தில் தனது தலைமையில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதற்கான தேதியை நேற்று அவர் அறிவித்தார். அதன்படி, ஜூலை 8ம் தேதி புதிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று அவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம், தனது கட்சியின் புதிய பெயர், சின்னம், கொள்கை ஆகியவற்றை அவர் அறிவிக்க உள்ளார். ஜூலை 8ம் தேதி, ராஜசேகர ரெட்டியின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் தற்போது, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு 2023ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை சந்திப்பதற்கான வியூகத்துடன், இப்போதே சர்மிளா புதிய கட்சியை தொடங்குகிறார்.

Tags : Telangana ,Sarmila , Sharmila
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...