கொரோனா காலத்திலும் குவிந்தது ரூ.9.45 லட்சம் கோடி நேரடி வரிகள் வசூல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பொருளாதார முடங்கிக் கிடந்த போதிலும், கடந்த நிதியாண்டில் இந்தியாவில் நேரடி வரிகள் மூலம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துளளது. உலகம் முழுவதும் கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால், பொருளாதாரம் படுபாதளத்துக்கு போனது. மக்கள் வருவாய்க்கு வழியின்றி தவித்தனர். பல லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், அரசுகளும் வரி வருமானம் குறைந்து தவித்தன. ஆனால், கொரோனாவால் இவ்வளவு பெரிய பொருளாதார பாதிப்புகளையும், நெருக்கடிகளையும் சந்தித்த போதிலும், இந்தியாவில் 2020-21ம் ஆண்டுக்கான நிகர நேரடி வரி வசூல் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி நேற்று அளித்த புள்ளி விவரம் வருமாறு: கடந்த மார்ச் 31ம் தேதியுடன் 2020-21ம் நிதியாண்டு முடிந்தது. தற்போது, 2021 - 2022ம் நிதியாண்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவதில் கடந்த நிதியாண்டில் (2020 - 2021) நேரடி வரிகளின் கம்பெனி வரி மூலமாக ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் வருமான வரி மூலமாக ரூ.4 லட்சத்து 71 ஆயிரம் கோடியும், பங்கு பரிவர்த்தனை வரிகள் மூலமாக ரூ.16 ஆயிரத்து 927 கோடியும் வசூலாகி உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதை விட 5 சதவீதம் அதிகமாக நேரடி வரி வசூலிக்கப்பட்டு, வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது. வருமான வரி செலுத்தியவர்களுக்கு கணிசமான அளவில் பணத்தை திருப்பிக் கொடுத்த போதிலும், இவ்வளவு பெரிய அளவில் வருமானம் கிடைத்துள்ளது. அதே நேரம், 2019 - 2020 நிதியாண்டின் நேரடி வரி வருவாய் வசூலை விட, 2020 - 2021ல் கிடைத்த வருவாய் 10% குறைவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: