போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், அ.சவுந்தரராசன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 45 நாட்களில் சென்னையில் மட்டும் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது அலை என்பது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200 அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் பரிசோதனைக் கட்டணம் ரூ.1500 வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும்.

மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம், மரணமடைந்தால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இது கொரோனா தடுப்பு பணியை பாதிக்கும். எனவே, அரசு அறிவித்தபடி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும் மதுபானக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: