தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி கதிர்ஆனந்த் எம்.பி.க்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: தியாகராயநகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்துக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளராக ஜெ.கருணாநிதி போட்டியிட்டார். கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், சளி, இருமல் போன்று கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். சோதனை முடிவுகள் நேற்றுமுன்தினம் வந்த நிலையில் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோன்று, திமுக பொருளாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர்ஆன்ந்த் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த சோதனை முடிவுகள் நேற்று வந்த நிலையில், கதிர் ஆனந்த் எம்.பி மற்றும் துரைமுருகனின் தம்பி துரை சிங்காரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>