ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை பெற காருடன் கணவரை எரித்து கொன்ற மனைவி

அவிநாசி: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக திருப்பூர் அருகே காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் துடுப்பதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (62). விசைத்தறி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இவருக்கு ரூ. 1 கோடி வரை கடன் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி கடத்தூர் பகுதியில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் ரங்கராஜன் படுகாயமடைந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குணமடைந்ததையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு அவர் கோவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி ஜோதிமணியும் (55), ரங்கராஜனின் தங்கை மகன் ராஜா (40) என்பவரும் வந்தனர். கார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்தபோது காரில் இருந்து புகை வந்ததாகவும் இறங்கி ரங்கராஜனை மீட்பதற்குள் கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டதாகவும் இதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்ததாகவும் ஜோதிமணியும், ராஜாவும் பெருமாநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ரங்கராஜனை ஜோதிமணியும், ராஜாவும் காருடன் எரித்து கொன்றது தெரியவந்தது.

ரங்கராஜனுக்கு ரூ.1 கோடிக்கு கடன் இருந்துள்ளது. அவர் ரூ.3 கோடிக்கு விபத்து காப்பீடு எடுத்திருந்தார். அதற்கு நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்தார். அந்த இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இருவரும் சேர்ந்து காருடன் ரங்கராஜனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து ஜோதிமணியையும், அவருக்கு உதவியாக செயல்பட்ட ராஜாவையும் பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜோதி மணி கோவை சிறையிலும், ராஜா திருப்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: