முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு தேர்தலோடு முடிந்தது: 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு: தேர்தல் முடிந்ததையடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 24 மணி நேர கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மும்முனை மின்சாரம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமுமாகும். இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து விவசாய மின் இணைப்புகளுக்கும் 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதி வரை எவ்விதத் தடையுமின்றி இது நீடித்தது. இந்நிலையில், வாக்குபதிவு முடிந்த அடுத்த நாளான 7ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டு முன்பு போல கட்டுப்பாட்டு முறையிலேயே மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் கூறியதாவது, விவசாயிகளிடம் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நெருங்கும் நேரத்தில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் வாக்குபதிவு நாளான 6ம் தேதி வரை கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளில் இருந்து முன்புபோல கட்டுப்பாடு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் ஓட்டு அறுவடை செய்வதற்காக பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி உள்ளார். தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர், விவசாயிகளுக்கு இதுபோன்ற துரோகத்தை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. இவ்வாறு பொன்னையன் கூறினார்.

Related Stories: