வாக்குச்சீட்டை அதிகாரிகளே கொண்டு சென்றனர் கன்னியாகுமரி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு: மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்தல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக வேட்பாளர் ஆஸ்டின் நேற்று நாகர்கோவிலில் குமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தபால் வாக்குப்பதிவுக்கு செல்லும் அதிகாரிகள் சீல்டு கவர் அல்லது பெட்டி வைத்துக் கொண்டு செல்ல வேண்டும், வாக்குப்பதிவு முடிந்து அதில் சம்பந்தப்பட்ட வாக்காளர் மற்றும் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்ட பின்னர் கடிதங்களை வாக்கு சீட்டு உடன் இணைத்து அந்த கவரை ஒட்டி உடனே பெட்டிக்குள் போட வேண்டும்.

கன்னியாகுமரி தொகுதியில் உள்ள 27 மண்டலங்களில் எந்த பகுதியிலும் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் வாக்குச்சீட்டுடன் கவரை ஒட்டி பெட்டிக்குள் போடாமல் அவர்கள் தனியாக ஜீப்பிலேயே கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக கேட்டதற்கு தாசில்தார் உடன் வரவில்லை, அவர் அலுவலகத்தில் உள்ளார். அவரிடம் ‘‘டெக்ளரேஷன்’’ கையெழுத்து பெற்று பெட்டியில் போட்டு விடுவோம் என்று கூறியுள்ளனர். அதனால் தபால் ஓட்டு கவரை மூடாமலேயே கொண்டு சென்றுள்ளனர். எனது வீட்டிலும் தபால் ஓட்டு பெற்ற போது இது நடந்துள்ளது. இதில் தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிலட ரகசிய முறையைப் பின்பற்ற வேண்டும். சிறிய அறையில் உள்ள வீடுகளில் வசித்தவர்களிடம் அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவும் ஒரு வகை தேர்தல் விதிமுறை மீறலாகும். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் எத்தனை பேர் வாக்களித்தனர் என்பதை என்னிடமோ, முகவரிடமோ தெரிவிக்கவில்லை. நாங்கள் சென்று கேட்டபிறகு 1733 பேர் தபால் மூலம் வாக்களித்ததாக கூறியுள்ளார்கள். ஆனால் இதில் எத்தனை ஓட்டுக்கள் முறையாக போடப்பட்டது என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட தபால் வாக்குப்பதிவை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>