சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார்: போலீசார் விரட்டிய போது குளத்தில் குதித்த ரவுடி சாவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் போலீசார் விரட்டிய போது குளத்தில் குதித்த ரவுடி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் ரவுடி பட்டியலில் இருந்துள்ளார். சிலம்பரசன் நேற்று முன்தினம் தனது பெற்றோரை பார்க்க சென்னையிலிருந்து தாராசுரத்துக்கு வந்துள்ளார். இதையறிந்த போலீசார் அவரை பிடிக்க விரட்டினர். அப்போது சிலம்பரசன் தாராசுரம் எம்ஜிஆர் காலனியில் உள்ள குளத்துக்குள் குதித்து மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று காலை சிலம்பரசன் ரத்தக் காயங்களுடன் தண்ணீருக்குள் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிலம்பரசனின் உறவினர்கள் கூறுகையில், சிலம்பரசன் நேற்று முன்தினம் காலை வந்த நிலையில் இரவு 10 மணி அளவில் போலீசார் அவரை பிடிப்பதற்காக விரட்டினர். போலீசாருக்கு பயந்து சிலம்பரசன் குளத்தில் குதித்து மறைந்திருந்தார். நள்ளிரவு 3 மணி அளவில் சிலம்பரசன் வெளியில் வரும்போது, கற்கள் மற்றும் கட்டைகளால் போலீசார் தலையில் அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: