காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் நாய்களை கொன்று தெருவில் வீசும் ஒப்பந்த ஊழியர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: காஞ்சிபுரம் நகராட்சி திருக்காலிமேடு, பல்லவன் நகர், மின் நகர், ஒலிமுகமதுபேட்டை, பல்லவர்மேடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நாளுக்குநாள் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும் போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவதும், பள்ளத்தில் விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதுபோன்ற தெருநாய்களின் தொல்லையால் குழந்தைகள் ரோட்டில் விளையாட முடியாமலும், மக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றுகின்றன. எனவே, நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த கோரி, பொதுமக்கள் பலர் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் எடுத்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

தெருநாய்களை பிடிப்பதில் சில வரையறைகளை நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, தெருநாய்களை முறையாக வலை மூலம் பிடித்து அதற்குரிய கருத்தடை சிகிச்சை செய்து, 7 நாட்களுக்குப் பிறகு பிடித்த இடத்திலேயே விடவேண்டும்.

ஆனால், காஞ்சிபுரம் நகராட்சியில் நாய்களைப் பிடிக்க தனியாரிடம் ஒப்பந்தம் செய்து, அந்த நிறுவனம் எந்த விதிமுறைகளையு பின்பற்றாமல் தெருநாய்களை கொடூரமான முறையில் பிடித்து கொன்று கோணி பைகளில் கட்டி வீசுகிறது. இதுபோல் 100க்கும் மேற்பட்ட தெருநாய்களை இதேபோல் கொன்று கோணி பைகளில் போட்டு வீசியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயைத் தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு, நோயை பரப்பும் வகையில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: