கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது: முகக்கவசம் அணிந்து மக்கள் பயணம்

சென்னை: சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எம்டிசியின் கூடுதல் பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் ஒருபகுதியாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணித்தனர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் அதிகமாக இல்லை. இருக்கைகள் காலியாக இருந்தன. நாளை முதல் (12ம் தேதி) அலுவலக வேலை நாட்கள் என்பதால் அப்போது பஸ்களின் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே அதற்கு தகுந்தார்போல், ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகமாகவுள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கிருமிநாசினி பற்றாக்குறை:

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் தற்போதைய நிலவரப்படி 2,500க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில் ஒருசிலவற்றில் போதுமான அளவு கிருமிநாசினி வைக்கப்படுவ தில்லை என பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களிலும் பயணிகள் நுழைவாயிலில் போதிய கிருமிநாசினி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: