விமான கழிவறையில் பதுக்கிய ரூ.65.38 லட்சம் தங்கம் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65.38 லட்சம் மதிப்புடைய 1.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய கடத்தல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.   துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி சென்றுவிட்டனர். அதன்பின்பு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருந்தது. இதனால், ஏர் இந்தியா ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தப்படுத்தினர்.

அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர்  தொட்டிக்குள் 2 மர்ம பார்சல்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடேக்டர் கருவிகளுடன் விரைந்து வந்து தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பார்சலில் வெடிகுண்டுகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த பார்சல்களை தண்ணீர் தொட்டியிலிருந்து வெளியே எடுத்து திறந்து பார்த்தனர்.

அதனுள் தங்கக்கட்டிகள் இருந்தன. இதையடுத்து சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்சல்களை சோதனையிட்டபோது, அந்த 2 பார்சல்களிலும் 1.36 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.65.38 லட்சம். இதையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தங்கம் கடத்திவந்த ஆசாமி யார் என்று விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: