அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ், இபிஎஸ் மனு: சசிகலா பதில் தர சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த  மனுவிற்கு பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொது செயலாளராக வி.கே. சசிகலாவையும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடந்தது.

அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும்  தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் பொதுக்குழு தேர்வு செய்தது. இதையடுத்து, அதிமுக நடத்திய  பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது. தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரியிருந்தனர். இந்த வழக்குகள் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரனைக்கு வந்தபோது, அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்கமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories:

>