கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு தெருவில் 3 பேர் கொரோனாவால் பாதித்தால், அந்த பகுதி தகர சீட் அடித்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 2ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 846 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. முன்னதாக கடந்த மாதம் 24ம் தேதி 620ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 846 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடம் கொரோனா பீதியை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 5,500க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளதுடன், தமிழகம் முழுவதும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 500க்கும் அதிகமான பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தமிழகம் முழுவதும் 1000ஐ நெருங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: