கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு கொரோனா நிவாரணத்தைக் கூட தர விரும்பாத கல் நெஞ்சக்காரர்கள் * 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் * அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை

சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு கொரோனா நிவாரணத்தைக் கூட தர விரும்பாத கல் நெஞ்சக்காரர்கள்தான் இவர்கள். எனவே புதிய அரசு பதவி ஏற்றதும், 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில், தமிழகத்தின் வியூகத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் நிறுவனமே தெரிவிக்கும் வண்ணம், அரசு மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறோம். இருப்பினும் நீண்ட காலமாகவே, அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தர வேண்டும்.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள், மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள், மருத்துவ பட்டமேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும். மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தை உடனடியாக மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் மக்களுக்கான கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப் படவில்லை.   

நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை துவக்கி உள்ளதாக பெருமையாக கூறும் அரசு, மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவானா ஊதியத்தை வழங்கி வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் அரசு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். பின்னர் முதல்வர் அளித்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை.

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மருத்துவர்களை ஏமாற்றிய அரசு, பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 118 அரசு மருத்துவர்களை தண்டித்தது. அதனால் ஏற்பட்ட உச்சகட்ட மன உளைச்சலால் மருத்துவர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மீண்டும் ‘கோவிட் கேர்’ மையங்கள் இயங்க வேண்டும் என அறிவித்துள்ள சுகாதாரத் துறைச் செயலாளர், களத்தில் நின்று பணியாற்றும் அரசு மருத்துவர்களின் வலியை மட்டும் புரிந்து கொள்ளவில்லை.

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை விரைவில் மாற்றிக் காட்டுவோம் என்ற முனைப்போடு, முழுவீச்சில் பணியாற்றி வருகிறோம். இருப்பினும் கொரோனா அதிகரித்தால் அதை எதிர்கொள்ள மீண்டும் கோவிட் கேர் மையங்களை இயங்க வைப்பதில் அக்கறை காட்டும் சுகாதாரத்துறை செயலாளர், இங்கே உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் நலன் குறித்து மட்டும் சிந்திக்காதது வருத்தமளிக்கிறது.

அதாவது, கொரோனா தொற்று அதிகரித்தால், மீண்டும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அரசு தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போரிட்டு வரும் மருத்துவர்களுக்கு மட்டும் எதுவுமே தர மறுத்து வருகிறார்கள், மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள். ஏன் கொரோனா நிவாரணத்தைக் கூட நமக்கு தர விரும்பாத கல் நெஞ்சக்காரர்கள்தான் இவர்கள். எனவே புதிய அரசு பதவி ஏற்றதும், வரலாற்று சிறப்புமிக்க முதல் அறிவிப்பாக தேசிய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: