மேற்குவங்க தேர்தலில் வன்முறை: 5 பேர் சுட்டுக்கொலை..! கலவரத்தை கட்டுப்படுத்த துணைராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விபரீதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 4ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில், துணை ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர்.  முதல் முறை வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவர், வரிசையில் நின்றிருந்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 44 தொகுதிகளுக்கான 4ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 3ம் கட்ட தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், நேற்றும் பல இடங்களில் திரிணாமுல்- பாஜ கட்சியினர் இடையே மோதல்கள் நடந்தன.

குறிப்பாக, கூச் பெகார் மாவட்டம், சிதல்குச்சி பகுதியில் 126ம் எண் வாக்கு மையத்தில் நடந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால், அங்கு பாதுகாப்பில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர். இறந்தவர்கள் திரிணாமுல் தொண்டர்கள் என அக்கட்சி கூறுகிறது. தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அந்த மையத்தில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதே போல், சிதல்குச்சியின் பதன்துலி பகுதியில் 85ம் எண் வாக்கு மையத்தில் முதல் முறை வாக்காளரான 18 வயதாகும் ஆனந்தா பர்மன் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அந்த நடந்த மோதலைத் தொடர்ந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பர்மன் பரிதாபமாக இறந்தார். வாக்குப்பதிவு நடக்கும் நாளில் 5 பேர் பலியான சம்பவத்தால் கூச் பெகார், ஹூக்ளி போன்ற பகுதிகளில் பல இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்தன.

ஹூக்ளியில் பாஜ எம்பி லாக்கெட் சட்டர்ஜி கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், சில பத்திரிகை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. முதல் கட்ட விசாரணையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் துபே அளித்த அறிக்கையில், ‘சிதல்குச்சியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் 300-350 பேர் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். சிலர் மத்திய பாதுகாப்பு படையினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிக்க முயன்றனர். இதனால் தற்காப்புக்காக வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்,’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறைக்கு திரிணாமுல், பாஜ கட்சியினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளனர். திரிணாமுல் குண்டர்கள் பூத்களை கைப்பற்ற முயன்றதாக பாஜவும், பாஜ கட்சியினர் தான் வன்முறையை தூண்டியதாக திரிணாமுல் கட்சியும் குற்றம்சாட்டி உள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே நேற்றைய 4ம் கட்ட தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Stories: