தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்திய அரசுதான் காரணம்: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நாட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியதற்கு மத்திய அரசுதான் காரணம்,’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா 2ம் அலை மிக வேகமாக, தீவிரமாக பரவி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்களுடன், கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் கொரோனா தடுப்பூசி தேவைக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகு, இதர நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது, ஏற்றுமதி ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு, கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  தேர்தல் பிரசாரம், கோயில் விழாக்களில் கூடும் பெரும் கூட்டத்தினால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதற்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும். நமது சொந்த நலனை விட நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகள், சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: