மேற்கு வங்க 4ம் கட்டத் தேர்தலில் பயங்கர வன்முறை : 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் 4ம் கட்ட தேர்தலில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. ஹவுரா, ஹூக்ளி, கூச் பெஹர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊழல் 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிதால்குர்ச்சி சட்டமன்ற தொகுதியில் முதல்முறை வாக்காளரான ஆனந்த் பர்மா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்களிக்க நின்ற அவரை மர்ம நபர்கள் தரதரவென வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டதால் வன்முறை வெடித்தது. இந்த பயங்கர மோதலை அடுத்து வன்முறையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மானபங்கா என்ற இடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து இன்றைய தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சில இடங்களில் வன்முறையாளர்கள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்து செயல் இழக்க வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாநில தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மேற்கு வங்காள தேர்தலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்களின் கார்கள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.  அவர்களது கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.  ஊடகங்கள் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: