பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் திருட்டு: 3 பேர் கைது

பெங்களூரு:  பெங்களூரு டாலர்ஸ் காலனி 2வது ஸ்டேஜை சேர்ந்தவர் சுவேதா சுப்பிரமணி. மார்ச் 3ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு  சென்றிருந்தார். மார்ச் 5ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இது குறித்து அவர் சஞ்சய்நகர் போலீசில் புகார்  அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சய்நகர் போலீசார் திருடர்களை பிடிப்பதற்காக வாகன சோதனை  நடத்தினர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததுடன் வாகனத்தை திருப்பி கொண்டு தப்பியோடினர். துரத்தி சென்ற போலீசார் அவரை மடக்கி  பிடித்து கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் தமிழக த்தை சேர்ந்த மணி என்ற நாக மணி (42), பாண்டியன் (53),என்று தெரியவந்தது.

இவர்கள்  கொடுத்த தகவலை வைத்து, ராமபுராவை சேர்ந்த ஆறுமுகம் (43)என்ற மற்றொரு திருடனை போலீசார் கைது செய்தனர். இவர்களில் முக்கிய  குற்றவாளியான மணி, 2001ம் ஆண்டு சென்னைக்கு வேலை விஷயமாக சென்றபோது, துரிதமாக பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையில்  திருட்டில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதுவே பழகி போனது. சில வழக்குகளில் கைதான இவர், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பின்னரும்  திருட்டில் ஈடுபட்டார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இவர் மீது திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோன்று பாண்டியனும் சென்னையில் பல்வேறு இடங்களில்  திருட்டில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் சிக்கி கொள்வோம் என்று பெங்களூரு வந்து, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு  வந்தார்.  மேலும் இது தொடர்பாக அவர்களிடம் நடந்த சோதனையில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  கைதான 3 பேர் மீதும் சஞ்சய்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: