மங்கோல்புரி பகுதியில் 3 வயது சிறுமியை கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி மங்கோல்புரி பகுதியில் 3 வயது சிறுமியை கடத்திய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ராஜ்பார்க் பகுதியில் வீட்டு முன்பு உள்ள பூங்காவில் 3 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தது. அவளது தாயார் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலையை முடித்து விட்டு வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை. இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தார். டெல்லி புறநகர் துணை போலீஸ் கமிஷனர் பர்வீந்தர் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள 50 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மங்கோல்புரியை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி சந்தோஷ் ஆகியோர் ஏப்ரல் 7ம் தேதி குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்த போது கடத்தல் சம்பவம் தொடர்பான முழுவிவரமும் வெளியானது. இதுபற்றிய தகவல் வருமாறு:டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வருபவர் மகேஷ்(25). இவரது உதவியுடன் ரவி மனைவி சந்தோஷிற்கு ஒரு நோயாளியை கவனிக்கும் பணி கிடைத்தது. இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கு நல்ல வருமானம் வந்தது. நோயாளி குணம் அடைந்ததால் நிதித்தட்டுப்பாட்டால் சந்தோஷ் குடும்பம் தடுமாறியது. இதையடுத்து மகேசை தொடர்பு கொண்ட போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒன்றை ஏற்பாடு செய்து தந்தால் ரூ. 50 ஆயிரம் தருவதாக கூறினார். எதற்காக என்று திருப்பி கேட்ட போது தன்னுடன் பணிபுரியும் ராம்பிரசாத் என்பவரின் சகோதரி குட்டான்(26), அவரது கணவரும் பிரிந்து விட்டனர்.

இதனால் குட்டான் மன அழுத்தத்தில் தவிக்கிறார். அவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறார் என்று கூறினார். இதையடுத்து 3 வயது சிறுமியை ரவியும், சந்தோசும் கடத்தி குட்டானிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதன் பேரில் போலீசார் ரவி(26), அவரது மனைவி சந்தோஷ்(25), மகேஷ்(25), குட்டான்(26), ராம்பிரசாத்(36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதில் குழந்தையை ஏற்பாடு செய்தால் ரூ.1 லட்சம் வேண்டும் என்று ராம்பிரசாத்திடம், மகேஷ் தனியாக பேரம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இதுபோல் வேறு குழந்தைகளை கடத்தியிருக்கிறார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: