துப்பாக்கி கலாச்சாரம் எப்போது முடிவுக்கு வரும்?!: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் சுட்டதில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்..!!

வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் பிரைன் என்ற இடத்தில் தொழில் வளாகம் ஒன்றில் மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். மர்மநபரை காவலர் விரட்டி சென்ற போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார். இறுதியாக கொலையாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெக்சாஸ் மாகாண போலீஸ் அதிகாரி கிராய்க் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த விசாரணையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். இதனிடையே தெற்கு கரோலினா மாகாணத்தில் ராக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் கால்பந்து விளையாட்டு வீரர் பிலிப் ஆதம்ஸ் ஆவேசமடைந்த துப்பாக்கியால் சுட்டதில் மருத்துவர், அவரது மனைவி, பேரக்குழந்தைகள் இருவர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஏசி மெக்கானிக் ஒருவரையும் பிலிப் ஆதம்ஸ் சுட்டுக்கொன்றார். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அச்சமயம் பிலிப் ஆதம்ஸ் வீட்டிற்கு சென்ற போது அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், போலீஸ் கைது நடவடிக்கைக்கு அஞ்சி விளையாட்டு வீரர் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ஜோ பைடன் தீவிர முயற்சி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

Related Stories: