ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்

சென்னை: ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மேலும் போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, அகமதாபாத், புதுடெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. எந்த அணியும், சொந்த மண்ணில் இம்முறை ஆடவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் 56 லீக் போட்டிகள், 3 பிளே ஆஃப் போட்டிகள், ஒரு பைனல் என மொத்தம் 60 போட்டிகள் ஏப்.9ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளே ஆஃப் மற்றும் பைனல் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 2010, 2011 மற்றும் 2018ல் நடந்த ஐபிஎல்லில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியில் கிரன் போலார்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா என வலுவான ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், குவின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ் மற்றும் கிறிஸ் லின் என பேட்ஸ்மேன்களும் மிரட்டுகின்றனர்.

ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் கோல்டர் நீல், பியூஷ் சாவ்லா, ட்ரென்ட் போல்ட் மற்றும் ்ராகுல் சஹார் என தரமான பவுலர்களும் உள்ளனர். விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, இம்முறை ஐபிஎல்லில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. பேட்டிங்கில் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் என 2 ஸ்டார்களுடன், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக நம்பிக்கை தருகின்றனர். கேன் ரிச்சர்ட்சன், ஆடம்ட சாம்பா, யுஸ்வேந்திர சாஹல், நவதீப் சைனி என திறமையான பவுலர்களும் இடம் பெற்றுள்ளனர். எனவே நாளைய முதல் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: